My teachers who brought change in me!

நானும் எனது ஆசிரியரும் 

முன்னுரை:-
 கற்பிப்போர் எல்லாம் ஆசிரியர் அல்லர், நாம் யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். ஆசிரியர் என்றால் குற்றங்களைக்  களைபவர். மழலை பள்ளி முதல் இன்று வரை  நான் சந்தித்த ஆசிரியர்கள் பலர். எனக்குப்  பாடம் கற்பித்த ஆசிரியர்கள்  சிலர். என்னைச்  சிந்திக்க வைத்த ஆசிரியர்களைப் பற்றியும் என்னிடம் உள்ள குற்றங்களைக்  களைந்து எனக்கு வழிகாட்டிய சில ஆசிரியர்களைப் பற்றியும்  அவர்களால் நான் கற்றவைப் பற்றியும் இக்கட்டுரையின் கண் காண்போம்.

 மழலையர் பள்ளியில் என் ஆசிரியர்கள்:- 
1981 ஆம் வருடத்தில்  தமிழ் நாட்டிலுள்ள மலை மாவட்டமான  நீலகிரியில்  அருவங்காட்டில் அமைந்துள்ள வெடிமருந்து தொழிலகத்தில்  தொழிலக மேலாளர்களின் துணைவியார்கள் மூலம் நடத்தப்பட்டு வெடிமருந்து தொழிலக குடியிருப்பில் செயல்பட்டு வரும்   'மாதர் சங்கம்' என்னும் பள்ளியில் படிப்பினை அன்புடனும் அரவணைப்புடனும் கற்றுத் தந்து உடல் உரத்தை மேம்படுத்தும் வகையில்  சத்துமாவுகஞ்சி மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கி  ஊஞ்சல்களில் விளையாட வைத்த ஆசிரியர்கள் என் கண் முன் தெரிகின்றனர். மதியம் உறங்க வைத்து கனிவாக பார்த்துக் கொண்டவர்கள்  குண்டு ஆசிரியர் மற்றும்  மேரி ஆசிரியர்.  இவர்களின் உண்மையான பெயர் தெரியாது. ஆனாலும் அவர்களிடம் கற்றதைக்  கடைப்பிடித்து வருகிறேன்.
 
தொடக்கப் பள்ளியில் என் ஆசிரியர்கள்:-
 அருவங்காடு  வெடிமருந்து தொழிலக ஊழியர்களின் குழந்தைகளுக்கான வெடிமருந்து தொழிலகத்  தொடக்கப் பள்ளியில் 1 மற்றும்  2 ஆம் வகுப்பும், 3 ஆம் வகுப்புப்  பிறந்த ஊரான காட்டேரி கிராமத்திலும் 4 ஆம் வகுப்பு  பாலாடாவிலும் படித்தேன். பின்னர்  5 ஆம் வகுப்பு வெடிமருந்து தொழிலகப் பள்ளியில்  படித்தேன். 

 ஆசிரியர்கள்  நிர்மலா,  லட்சுமி, பிராபவதி, போஜன் ஆகியோர்  குழந்தைகளுடன்  குழந்தைகளாகப் பழகுவார்கள். அப்போதே வகுப்புகளுக்கு  இடையில் உள்ள தட்டிகளை அகற்றி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் வெளிப்படையாகவும்  நேர்மையாகவும் கண்டிப்புடனும்  தேர்வு நடத்தினார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர்  வலம் வந்தார்கள். அந்த நடைமுறை  தேர்வுக்கு முறையாக படித்தால் தான் தேர்வில் வெற்றி பெறமுடியும் என்பதை எனக்குக்  கற்பித்தது. 

என் சொந்த ஊரில் 3ஆம் வகுப்புப்  படித்தப்  போது அங்கிருந்த ஆசிரியர் பட்டப்பெயர் வைத்து என்னை அழைக்க மனம் புண்பட்டது. தந்தையிடம்  கூறி ஆசிரியர் வீட்டுக்கு முறையிட போனது இன்றும் என் நினைவில் உள்ளது. அதனால்தான் என்னவோ யாரையும் பட்டப் பெயர் வைத்து   அழைப்பதே  இல்லை. 

4ஆம் வகுப்புப்  பயின்ற போது பாலாடா பள்ளிக்குச் சற்றுத்  தொலைவு நடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்பள்ளியில் நாராயணன் ஆசிரியரின்  அன்புதான் இன்றும் என் நினைவில் நின்று இருக்கிறது. அவர் மூலிகை வைத்தியம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. 

5ஆம் வகுப்புக்  காலாண்டு தேர்வில் 'தீபாவளி' பற்றி குறிப்பு வரைக என்று ஒரு கேள்வி வந்திருந்தது.  கட்டுரை எழுதும் பயிற்சி இல்லாததால் நானும் அழகாக பட்டாசு, பலகாரம், புத்தாடை, கோலம் என வரைந்து வைத்திருந்தேன். கடிந்து கொள்ளாமல் ஆசிரியர்  ஜார்ஜ் அவர்கள்  கட்டுரை எழுதும் முறையைக் கற்பித்தார். 

 பள்ளியில் அ, ஆ என இரு பிரிவுகள் இருந்தாலும் அவ்வப்போது   ஆசிரியர்கள் மாணவர்களை அவ்வப்போது  ஒன்றிணைத்து பாடம் நடத்தினார்கள். மதியம் நாங்கள் சாப்பிடும் வரை  கண்காணிப்பது ஆசிரியர்களின் வழக்கம். இன்றும் நான்  என் மாணவர்கள் சாப்பிடும் வரை உடனிருந்து வழிநடத்த அவர்களே காரணம். 

 ஒரு முறை என் தம்பிக்குக்  குறிப்பேட்டில் எழுதி கொடுத்து விட்டேன். ஆசிரியர் ஆலிஸ் திட்டினார்கள். அன்றிலிருந்து யாருக்கும் நான் எழுதி கொடுப்பது  இல்லை. என் மாணவர்களது குறிப்பேடுகளில்  மற்றவர் கையெழுத்தும் இருக்க விடுவதில்லை. ஏனெனில் நாம் ஒரு முறை எழுதுவது 5முறை படிப்பதற்குச்  சமம் என்பதை அன்றே கற்பித்தார்கள். 

உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்களின்  உயர்வான எண்ணங்கள்:-
 வெடிமருந்து தொழிலக மேனிலைப் பள்ளி, அருவங்காட்டில் என் ஆறாம் வகுப்பைத் தொடர்ந்தேன். வகுப்பாசிரியரும்  ஆங்கில ஆசிரியருமான சுகுமாரி  அவர்கள் முதன் முதலாக இன்பச்சுற்றுலாவாக கல்லார் அழைத்துச்  சென்றார். என் தந்தையிடம்  அனுமதி பெற போராடினார். சென்ற இடத்தில் சிறிது இடறினாலும் பாதுகாப்பாக கவனித்தார். நானும் என் மாணவர்களது பெற்றோர் அனுப்பாவிட்டால் அவரைப்  போலவே பேசி என் பள்ளி குழந்தைகளைச்  சுற்றுலா அழைத்துச்  செல்கிறேன். 

 தமிழாசிரியர் இராமகிருஷ்ணன் அவர்கள் மாணவர்களைப் பற்றி வீட்டில் கூறிவருவதால் என்னவோ இன்று வரை அவர் குடும்பத்தினருடன் உறவு கொண்டாடி வருகிறோம். அறிவியல் ஆசிரியர் சிவராஜ் அவர்கள் அறிவியலுடன் ஆன்மீகத்தையும் கற்பித்தார். காந்தியடிகளின் சத்தியச் சோதனை மற்றும் தர்மச்சக்கரம் போன்ற புத்தகங்களைப்  பரிந்துரைத்ததோடு அத்துடன் தொடர்புடையத்   தேர்வுகளிலும் பங்கெடுக்க வைத்தார்.  விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோரின் வாழ்க்கை நெறிகளைச்  சிறிதாயினும் கடைப்பிடிக்கக்  கற்பித்ததோடு தியானப் பயிற்சியும் வழங்கினார். இன்று வரை நான் இருவேளைகள்  பல்துலக்க அவரே காரணம். 

 கணித ஆசிரியர் சாந்தாமணி அவர்கள்  சற்றுக்  கண்டிப்பானவர். சுறுசுறுப்பானவர்.
பொறுமையானவர். எத்தனை இடையூறுகள்  வந்தாலும் தனது கற்பித்தலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். வீட்டுக்குச்  சென்று சந்தேகங்களைக்  கேட்டப்  போதும் சலிப்பு இல்லாமல் சொல்லிக் கொடுத்தவர். ஆனால் 4ஆம் வகுப்பில் கணிதத்தில் சுழியம்  எடுத்த எனக்கு 50 மதிப்பெண்களுக்குள்  தான் முதல் மதிப்பெண்ணாக பெற முடிந்தது. 

 மஞ்சள்பையும் குடையும் கொண்டு  வரும் வரலாற்று ஆசிரியர்   சீனிவாசன் அவர்கள் எங்களிடம் செல்லமாக பழகுவார். ஒரு முறை அவர் கையொப்பம்   எளிமையாக இருக்கவே  விளையாட்டாக பயிற்சி செய்யும் போது அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டினார். அன்று தான் பெரியவர்கள் கிறுக்குகின்ற கையொப்பத்தின் மதிப்பை உணர்ந்தேன்.

அறிவியல் ஆசிரியர் சரஸ்வதி அம்மையார் கண்பார்வை குறைபாடு உடையவர். அவரின் வழிகாட்டுதலில் அவருக்கு உதவ மாணவர் வருகை பதிவேட்டில் என்னனென்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அவர் பாடம் புகட்டும் முறை எனக்கு அவர்பால் ஈர்ப்பைத்  தந்தது. 

 உடற்பயிற்சி ஆசிரியர் ராஜா அவர்கள் சீருடை, காலணி, பள்ளிக்கூடம் சரியாக வருதல்  என ஒழுக்கமாக இருக்க மிகுந்த அக்கறை எடுத்தார். போஜன் ஆசிரியரும் உடற்பயிற்சியில் புதுமைகளைப்  புகுத்தினார். என் தந்தையார்  என் உடல் நலத்தில் கொண்ட அக்கறையினால் விளையாட்டுப்  போட்டிகளில் சேர அனுமதிக்காததால் எனக்குப் பாட்டு பாட, லெசீம் நடனம் ஆட , அணிவகுப்பில் பங்கேற்க    சாரணியர் இயக்கத்தில்   தலைவராக இருக்க எனப்  பல வாய்ப்புகளைத்  தந்து ஊக்குவித்தார்கள். அவர்களைப் போன்று  காலை பிரார்த்தனைக் கூட்டத்தின் போதே சீருடை, காலணி, முடித்திருத்துதல், நகம் வெட்டுதல் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்துக்  கவனிக்கின்றேன். 

 ஓவிய ஆசிரியர் ரவீந்திரன் அவர்கள் வரைதலில் பல நுட்பங்களைக்  கற்பித்தார். அவருடையப்  பயிற்சி தான் ஆசிரியர்களுக்கான  பயிற்சிகளின் போது கரும்பலகையை அலங்காரம் செய்ய முன்னால் செல்லும் அளவிற்கு எனக்குத்  தன்னம்பிக்கையை அளித்து வருகிறது. அவர்  மாணவர்களிடம் நண்பராக பழகுபவர். ஓவிய ஆசிரியரே இல்லாத என் பள்ளி  மாணவர்களுக்கும் எளிய ஓவியங்களை வரையப் பயிற்சி அளிக்கிறேன். 

7 ஆம் வகுப்பில் எனக்குத்  தமிழாசிரியாராக வந்த ஆசிரியர் கணேசன் அவர்கள் தான் எனக்குள் தமிழ் ஆர்வத்தை வித்திட்டவர். கையெழுத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். நாள்தோறும் கவனிப்பார். நன்றாக எழுதினால் பாராட்டி பரிசுகளைத்  தந்து ஊக்குவிப்பார். அவரிடம் படித்த காலத்தில் அவரின் வழிகாட்டுதலில்  தான் பேச்சுப்  போட்டி, கட்டுரைப்  போட்டி, கவிதைப்  போட்டி என அனைத்திலும்  பல முறை பரிசுகளைப்  பெற்றேன். அவர் நாள்தோறும் செய்தித்தாள் மற்றும் திருக்குறள் எழுதித்  தருவார். அதனைக்  காலை வழிபாட்டுக்  கூட்டத்தில் படிக்க போதிய பயிற்சி அளிப்பார். அதற்காகவே பள்ளிக்குச்  செல்லும் முதல் மாணவியாக  இருந்தேன். அதுவே மாணவராக இருந்த காலம் முதல் இன்று வரை நான் எல்லா நாளும் முதலில் பள்ளிக்குச்  செல்ல வழிவகுத்தது எனலாம். செய்தித்  தொகுப்பாளர் சோபனா ரவி போல் வாசிக்கிறாய் என்றும் தமிழ் ஆசிரியர் சுஷுலா அம்மையார் போல் பேசுகிறாய் என்றும் பலரும் பாராட்டினர். இந்த பாராட்டுதல்களே இன்று  பல மேடைகளில் எனக்கு பேசுவதற்கான அடிப்படையை  அமைத்து தந்தது. என் கையெழுத்தைப்  பார்த்து ஒவ்வொரு நாளும் பிறர் பாராட்ட  அவர் பெயரை உச்சரித்து வருகிறேன். என் மாணவர்களும் தினமும் காலையில் என்னைப்  பார்த்ததும் மேசையின் மீது கையெழுத்து குறிப்பேட்டினை  எழுதி வைத்து விடுவார்கள். அதனால் அவர்களது  கையெழுத்து மிகவும் அழகாக இருப்பதால் உயர் அதிகாரிகளின் பார்வையின் போது பாராட்டைப்  பெற்று வருகின்றனர்.

 ஆங்கிலம் எனக்குச்  சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் ஆசிரியர்கள் ஜெயப்பிரகாஷ், மணி,  பால்  இவர்கள் பேசும்போது இவர்களைப் போன்று என்னால் பேசமுடியுமா? என்ற ஏக்கத்தைத்  தந்தது. அவர்கள்  ஆங்கிலத்தில்  சகஜமாக பேசுவதால் வகுப்பறையில் மௌனம் காத்தாலும் ஆசிரியர் ஓய்வு அறையில் சுதந்திரமாக பேச வாய்ப்புத்  தந்தார்கள். 2014ல் SCERT யில் Paper Presentation செய்ய 20 ஆண்டுகள் கழித்து ஆலோசனைப்  பெற  ஆசிரியர் மணி அவர்களின்  வீட்டுக்குச்   சென்ற போது வகுப்பில் உட்கார்ந்து கவனிப்பது போல் ஓர்  உணர்வு ஏற்பட்டது. 

 8 ஆம் வகுப்பில் கற்பித்த  ராஜு ஆசிரியர்  தான்  கணிதத்தை எளிய வழியில் கற்க எனக்கு உதவினார். அடிப்படையில் இருந்து, வாய்ப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கற்பித்ததால் பத்தாம் வகுப்புப்  பொதுத்  தேர்வில் 99 மதிப்பெண்கள் பெற முடிந்தது. 10 ஆம் வகுப்பில் உடனுக்குடன் பதில் சொல்லவே என்னை 9ஆம் வகுப்பு ஆங்கிலவழி மாணவர்களின் உடற்கல்வி பாட வேளையில் அவர்களுடன் சேர்த்து வைத்தார். விளையாட்டின் மீது ஆர்வத்தால் வீட்டுப் பாடங்களை உடனுக்குடன் முடித்து விடுவேன். அன்றே ABL முறையைக்  கையாண்டவர் என்பதைச்  செயல் வழி கற்றல் பயிற்சிகளின் போது நினைவு கூர்ந்தேன். நானும் ஒவ்வொரு ஆண்டும் 6 வகுப்பிற்கு முதன் முதலாக வரும் என் மாணவர்களுக்கு  அடிப்படைத்  தமிழ் , ஆங்கிலம், கணிதம் கற்பித்தப் பிறகு  தான் முறையாக ஆங்கிலம் கற்பித்து வருகிறேன்.
 
ஒவ்வொரு மாதமும் பள்ளியில்  கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பல போட்டிகளில் கலந்து கொண்டேன்.  சினிமாத்துறையில் தான் நடனம்  ஆடுவார்கள் என்று என் தந்தை  நடனம் ஆட அனுமதிக்கவே இல்லை. ஒரே ஒரு முறை தந்தையிடம்  நயமாக எடுத்துக்  கூறி மேடையில் 'பொட்டு வைத்த நிலா ஒன்று 'என்ற பாடலுக்கு ஆடவைத்த ஆசிரியை பால் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அதனால் தான் பள்ளியில் ஒவ்வொரு கலை நிகழ்ச்சியிலும் மாணவர்களை வாய்ப்பினைப்  பயன்படுத்துங்கள் என்று ஊக்குவித்துப்  பங்கேற்க வைக்கின்றேன்.
 
 குள்ளமாக இருந்ததால் வகுப்பறையில் மேசையின் மீது உட்கார வைத்துப்   பாராட்டிய  தலைமை ஆசிரியர் காளிமுத்து ஐயா அவர்களைப்  போல் நானும் தலைமை ஆசிரியர் ஆனால் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று மாணவர்களைப்  பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. எனக்கு 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் படித்து கொண்டிருந்த போது  திருமணப்  பேச்சு எழுந்தது.    'படிக்க வையுங்கள் ' என்று அறிவுறுத்தி  என் பெற்றோருக்கு வழிகாட்டியவரும் அவரே.
 
 அப்பள்ளியில் எனக்குப் பாடம்  கற்பிக்காவிட்டாலும் காலை வழிபாட்டுக் கூட்டம், ஆய்வகம் என வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்களையும் நினைவு கூர்கிறேன். 

மேனிலைப் பள்ளியில் எனது ஆசிரியர்களின் வழிகாட்டுதல்:-
1-10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றேன். மருத்துவப் படிப்பிற்கு ஏற்ற  அறிவியல் பிரிவு ஆங்கில வழியில் மட்டுமே வெடிமருந்து தொழிலக மேனிலைப் பள்ளியில்  இருந்ததால் ஆங்கில வழியில் கல்வியைத்  தொடர்ந்தேன். இந்தியும் ஆங்கிலமும் பயின்ற  மாணவர்களுடன் பேச பயந்து நான் மதிய உணவுக்கும் நெடுந்தொலைவில் இருந்த என்  வீட்டுக்குச்  சென்று  சாப்பிட்டு வந்தேன். ஆனால் குடும்பச் சூழலும்  மருத்துவக்  கனவும் மனனம் செய்தாவது படித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை   என்னுள் விதைத்தது. தனது அன்பான வார்த்தைகளால் எனக்குத் தன்னம்பிக்கையூட்டி வளர்த்தவர் இயற்பியல் ஆசிரியர் சுந்தரபாஷியம்  அவர்கள். கண்டிப்பாக இருந்தாலும் எனக்கு புரிதலில் உள்ள சிரமத்தை உணர்ந்து நான் அயர்ந்து விடும் போது ‘புரியுதாமா ?’ என்று கண்காணித்தவர் வேதியியல் ஆசிரியர் இராமசாமி அவர்கள். குழந்தையாக நினைத்துக்  கற்பித்தவர் சரோஜினி ஆசிரியர். பள்ளியில் எனக்குப்  பாடம் கற்பிக்காவிட்டாலும் ‘உன்னால் முடியும்’ என்று ஊக்கத்தைத்  தந்த ஆசிரியர்கள் பில்லன், இராதாகிருஷ்ணன், கிருஷ்ணதாஸ் எனப்  பலர். 

 அத்துணை ஆசிரியர்களும் எங்கள் வீட்டில் என் சகோதர, சகோதரிகள் ஐவரையும் படிக்க வைத்தத்  தெய்வங்கள். அவர்களில் சில ஆசிரியர்கள்  இன்று வரை எங்கள் வீட்டின் சுக துக்கங்களில் பங்குப்  பெற்று வருவது பள்ளியைத் தாண்டி,  வருடங்கள் தாண்டி, ஓய்வைத் தாண்டி உறவை பலப்படுத்தி என்னை வழிகாட்ட நான் பெற்றது  வரம். சென்ற ஆண்டு நடைபெற்ற பள்ளியின்  90 வது  ஆண்டு விழாவில் பெரும்பாலான  ஆசிரியர்களைச்  சந்தித்தது மன மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியைத்  தந்தது. எனக்குக்  கிடைத்த ஆசிரியர் போல் எல்லோருக்கும் வாய்த்தால் அனைத்து மாணாக்கர்களும் சிறப்புருவர். நல் ஆசான்களுக்குத்  தலை வணங்குகிறேன்.
 
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் என் ஆசிரியர்கள்:-
 மருத்துவம் கிடைக்காத நிலையில் 1993-95 களில்   கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்  சேர்ந்தேன். முதல் நாள் முதல் முன்னாள் மாணவர்களின்  சிறு துன்புறுத்தல்களுக்கு (ரேகிங்க்கு) பயந்து  பயிற்சிக்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவுடன் தந்தையை  அழைத்து   பயிற்சி  நிறுவனம் சென்றேன் அன்று பேராசிரியர் தேவராஜ் அவர்கள் ‘இவற்றை எல்லாம் பெரிதாக  எடுக்காதே சரியாகிடும்’ என்று ஆறுதல் அளித்ததால் பயிற்சியையும் முடித்து ஆசிரியர் ஆன பிறகும்  பணியிடை பயிற்சிகளில் அவர் தந்த வாய்ப்புகளும் 2011ல் அவர் முதல்வராக   VIP seat என்னும் ஒரு செயல்பாட்டில் என்னிடம் உள்ள நிறை, குறைகளைத்  தலைமை ஆசிரியரும் தலைமை ஆசிரியரிடம் உள்ள நிறை, குறைகளை நானும் எடுத்துக்  கூற வேண்டிய நிலையில் தலைமை ஆசிரியர் -ஆசிரியர் உறவுக்கு நாங்கள் சிறந்த உதாரணமாக இருந்தது மனநிறைவைத்  தந்தது. எதையும் இலகுவாக எடுக்க வேண்டும் என்று  கூறும் ஜோஷுவா ஐயா அவர்களை என்றும்  நினைவு கூர்ந்து கொண்டு வருகிறேன். 

ஆசிரியர் பணியின் அருமையினை உணர்த்திய ஆசான்கள் :
 2001 ஆம் ஆண்டில் ஆசிரியராக பணியேற்றேன். பணியில் அனுசரித்து போக கற்பித்தவர் தலைமை ஆசிரியர் இலட்சமணன் அவர்கள்.ஆசிரியரான நான் எவ்வாறு என் பணிகளைத்  திட்டமிட வேண்டும் என்பதை உணர்த்தியவர் 2003ல் தலைமை ஆசிரியராக இருந்த  வட்டாரக் கல்வி அலுவலர் தேசிங் அவர்கள். பாடம் கற்பிப்பதும்  மாணவர்களை உயர்த்த முயற்சிப்பதுமாக  இருந்த எனக்கு சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வழிகாட்டியவர் 2010-2012 ஆம் ஆண்டுகளில் தலைமை ஆசிரியராக  திரு. S. மனோகரன் அவர்கள். அவரால் தான் இன்று  எனக்குப்  பல பொறுப்புகள் வந்து சேர்ந்தன. அவர் ஓய்வு பெற்றாலும் அவரின் அறிவுரையை இப்போதும் பின்பற்றி வருகிறேன்.

முடிவுரை:-
 ஓர் ஆசிரியரிடம் படித்து எத்தனை பேர் மருத்துவர், பொறியாளர், மாவட்ட ஆட்சியாளர்களாக உயர்ந்தார்கள்   என்பதல்ல வெற்றி. எத்தனை பேர் அவர்களைப்  பின்பற்றும்  ஆசிரியர்களாக உயர்ந்தார்கள்  என்பதே வெற்றி. நான் இன்று ஒரு சிறந்த ஆசிரியர்  என்று பலரால் அடையாளம் காட்டப்படுவதற்கு முன்னோடியாக வாழ்ந்து  காட்டிய ஆசிரியர் பெருந்தகைகளுக்கு இக்கட்டுரையைச்  சமர்ப்பணம் செய்கிறேன். 
த. புஷ்பா, பட்டதாரி ஆசிரியர்  
 சோகத்தொரை,குன்னூர், நீலகிரி. 
 30.10.2020

Comments

  1. அருமையான ஆழமான பதிவு சகோதரி 🌹. உங்கள் ஆசிரியர்களைப் போல் உங்கள் பணியில் மென் மேலும் வளர்ந்திட
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🌹🌹

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசிரிய சகோதரியே!

      Delete
  2. You are the inspired one to most of our teacher family. I take a spellbound for your dedication.

    ReplyDelete
  3. இந்தப் பட்டியலில் உங்கள் பெயரும் உங்கள் அன்பிற்குரிய மாணவர்களால் போற்றிப் பாதுகாக்கப்படும் ....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆசிரிய நண்பா!

      Delete
  4. I'm very lucky to have u in my journey ma.....u r inspiring not only students but also teachers and society .....hats off♥️

    ReplyDelete
  5. Great......only inspired people can inspire others... Hats off

    ReplyDelete
  6. I read My teachers who brought change in me . You had the gifted teachers who made a gifted teachar ( Pushpa). congratulations teachar to continue your successful Teaching profession.

    ReplyDelete
    Replies
    1. Yes Sir. I am always so proud of my facilitators.🙏🙏🙏

      Delete
  7. சூப்பர்ங்க மிஸ்🌹🌹🌹
    உங்கள் ஒருவரை போல் பல மாணவர்கள் எழுதுவார்கள் உங்களை பற்றியே

    ReplyDelete
  8. உங்கள் நினைவலைகள் என்னையும் என் பள்ளிப் பருவங்களை ஞாபகப்படுத்தியது. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  9. அருமையான பதிவு.....

    ReplyDelete
  10. உங்கள் ஆசிரியர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! ஏட்டுச்சுரைக்காய் ஆக இல்லாமல் உம் போன்றோருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அறிவுக்களம் கண்ட அருமை ஆசான்கள்! ஒவ்வொரு வெற்றியாளருக்கும் பின்னால் ஆதாரப் புள்ளி யாக ஓர் ஆசிரியராவது இருப்பார் என்பது திண்ணம். அதனை உறுதிப் படுத்துகிறது உங்களின் கைவண்ணம்!

    ReplyDelete
  11. நெகிழ்ச்சியான பதிவு, உங்கள் மாணவர்களின் வாழ்வின் வளர்ச்சியிலும் உமது பங்கு சிறப்பானதாக இருக்கும்

    ReplyDelete
  12. Congratulations on your creative writing.Keep it up.Hard work never fails.

    ReplyDelete
  13. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  14. Wonder article Pushpa teacher. I was astonished by the details you have given about your teachers in the primary sections. I appreciate your memory and appreciation shown towards all your mentors.
    Your students are gifted to have a teacher like you.
    Continue this wonderful journey and keep inspiring....Prayers for all your future endeavours...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Identity as a Writing Teacher

Exploratory Action Research 2023