Dinamalar Ambitious Teacher 2014

        இலட்சிய ஆசிரியர் 2014

முன்னுரை:-
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெட்டட்டி ,குன்னூரில் அண்ணாநகர், அம்பேத்கார் நகர், சுங்கம் போன்ற காலனி பகுதிகளிலிருந்து 1936 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தும் இன்றளவு வரை ஒரு பட்டதாரி வெளிவரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு காரணம் அவர்களுடைய சமூக, பொருளாதார, பண்பாடு, கலாச்சார பின்தங்கிய நிலையே. 23.08.2001 இல் அரசு பணியில் சேர்ந்த எனக்கு 10 .06. 2010 முதல் இப்பள்ளியில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது. தற்போது இச்சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கட்டுரையின் கண் காண்போம்.

நல்லொழுக்கத்தினால்  தன்னம்பிக்கையை வளர்த்திட்ட மாணவர்கள்:- 
சீருடையே மாணவனின் சின்னம் என்பதால் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த திரு எஸ் மனோகரன் அவர்களின் அனுமதியின் பேரில் சீருடை சரிவர அணியாத சிறுவர்களை காலை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்பே வீட்டிற்கு அனுப்பி வரவே இன்று எங்கள் பள்ளியில் வாரம் மூன்று விதமான சீருடைகளை அணிகின்றனர் காலணியே இல்லாமல் இருந்தவர்கள் காலணி அணிந்து சிறப்பாக வருகை புரிகின்றனர்.

 மாணவர்கள் பாட நூல்களையும் நோட்டுப் புத்தகங்களையும் பொறுப்பின்றி கிழித்து பள்ளி வளாகமே காகிதக் குப்பைகளால் பறப்பதைக் கண்டு மாணவர்களுக்கு அட்டையையும் வாங்கி அட்டைப் போட்டு பின்னால் அவர்களுக்குப் பிடித்த குறிப்புகளை எழுத வைத்ததால் இன்று ஏடுகளை பத்திரமாக பயன்படுத்த கற்றுள்ளனர்.

 மாணவர்கள் வறுமையின் காரணமாக எழுது பொருள்கள் எடுத்து வருவது அபூர்வம். அவ்வாறே எடுத்து வந்தாலும் அவற்றை விரயம் செய்து எழுத திண்டாடினார்கள். அவர்களுக்கு மை பேனாக்களையும் மையையும் பள்ளியிலேயே வழங்கியதால் ஆரம்ப காலத்தில் மை பேனாக்களில் உள்ள மையை அங்குமிங்கும் சிந்தி அலங்கோலம் செய்தனர். ஆனால் இன்றோ அழகாக கையெழுத்தினை அலங்கரித்துள்ளனர். பிளாஸ்டிக் பயன்பாட்டையும் குறைத்துள்ளனர்.

 சுத்தம் என்றால் என்ன ? என்று அறியாத சமுதாய மாணவர்கள் தலை சீவாமல், நகம் வெட்டாமல் ,அழுக்கான உடையுடன் இருக்க சக ஆசிரியர்கள் நான் மாணவர்களிடம் தொட்டு உறவாடுவதை அருவருப்பாக பார்த்தனர் .ஆனால் தினமும் பள்ளியிலேயே நகம் வெட்டுதல் செய்து பழக்கவே அனைவரும் சுத்தமாக சுதாரித்து வருகின்றனர்.

 பள்ளிக் கழிவறை சுத்தம் ஏதோ இரு இளிச்சவாயர்கள் ஏற்று செய்ய நானும் அவர்களோடு கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு சக ஆசிரியர்கள் உங்கள் கைக்கு தங்க வளையல் போடலாம் என்று என்னை பாராட்டுவதைக் கண்ட நாள் முதல் மாணவர்கள் மனமுவந்து அனைவரும் கழிவறையை சுத்தமாக கையாளுகின்றனர்.

 நொறுக்குத் தீனியை உண்டதனால் மதிய சத்துணவை உண்ணாமல் வாரி வீசிய மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம், உணவு உண்ணும் முறை முதலியவற்றை சிறு சிறு கதைகளாக கூறி உணவு வேளையில் கண்காணித்து வந்ததால் அன்று சுருங்கி இருந்த அவர்களது உடல்கள் இன்று விரிந்து உணவை வீணாக்காமல் உண்டு உடல் நலத்துடன் திகழ்கின்றனர்.

 மேலும் பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் யோகா பயிற்சி கற்றுத்தர வந்த பயிற்றுனர் இந்தப் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடே கிடையாது. இந்தச்  சேரி மாணவர்களுக்கு யோகா வராது எனக்கூறி ஒதுங்கினார். ஆனால் அதே மாணவர்களுக்கு மெல்லிசை பாடல்களுடன் கற்பித்ததால் இன்று இவர்கள் சிறப்பாக நுணுக்கத்துடன் செய்து மனக் கட்டுப்பாட்டை வளர்த்துள்ளனர். 

சமூக அக்கறை கொண்ட எம் பள்ளி மாணவர்கள்:-

இளம் பிஞ்சுகள் சிலர் தவறு என்று அறியாமல் தாய், தந்தையர் இருவரும் சுவைத்த எஞ்சியுள்ள   பான்பராக் ,மது, பீடி ,சிகரெட் ,புகையிலை போன்ற போதை பொருட்களை ருசித்து பள்ளியில் மல்லாடுவதையும் பெற்றோர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு வர மற்றவர்கள் கேலி யால் பிஞ்சு மனது படும் வேதனையையும் கண்டு நானும் 5 மாணவர்களும் சேர்ந்து செய்த மாற்றம் என்பது சாத்தியமே Say No To Drinks  செயல்திட்டம் 8 பேரை குடியை விட தூண்டியது. மேலும் மாணவர்கள் போதை பாதையின் கொடுமையை சமுதாயத்திற்கு பறைசாற்றி, பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற அமைதி வழியில் போராட்டத்தை துவங்கியுள்ளனர் .

பணத்திற்காக கொலை, கொள்ளை, திருட்டு என்று வாழ்ந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆசிரியரது பர்ஸிலேயே ஆட்டையைப் போட்டனர். பள்ளியில் இருந்த பீரோ பூட்டை உடைத்தனர். விடுமுறை நாட்களில் பூட்டிய வகுப்பறையை திறந்து மலம் கழித்து அசிங்கம் செய்வதும் வளாகத்தை பாழ்படுத்துவதுமாக இருந்தவர்கள் இன்று பள்ளி என்ற சமுதாயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

We are ready to read English ,Speedy Speakers in English  போன்ற செயலாராய்ச்சிகளை மேற்கொண்டு ஆங்கில மொழிப் புலமையை வளர்த்ததனால் பணத்தையே குறிக்கோளாக்கி வேலை வேலை பெற்றோர்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்காக மாதா மாதம் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழுவில் தவறாது பங்கேற்கின்றனர்.

நாட்டுப் பற்றுடன் விளங்கும் நாளைய தலைவர்கள்:- 

பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கத்தில் 6 முதல் 8 வகுப்பில் பயிலும் அனைவரும் பங்கேற்று 'அனைவரும் சகோதரர்கள்' என்ற மனப்பான்மை மேலோங்க செய்தனர். பொருளாதார நிலை உயர, வெம்மை  உடைகள், தரைவிரிப்புகள், வாழ்த்து அட்டைகள், மாலைகள் என தேவையற்ற பொருட்களை கொண்டு செய்யும் கைத்தொழிலை கற்று அதன்மூலம் ஈட்டும் பணத்தினை அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்கி மகிழ்கின்றனர்.

பள்ளியில் புதர்காடாக இருந்த இடத்தை பண்படுத்தி அழகானதொரு காய்கறி தோட்டம் அமைத்து கீரை காய்கறிகளை இயற்கை உரங்கள் இட்டு, மரங்களையும் வளர்த்து சுற்றுச்சூழலை பேணிக்காத்து வருகின்றனர்.

பள்ளிக்கு மருத்துவர்களையும் சாலை போக்குவரத்து காவலர்களையும் அழைத்து விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி நாட்டு மக்களுக்கு சேவை புரிகின்றனர்.
மருத்துவமனைகளுக்கும் அருகாமை பள்ளிகளுக்கும் Junior Red Cross படையினர் பார்வையிட செல்வதால் சுயமதிப்பீடும் செய்ய அறிந்துள்ளனர்.

பாட இணைச் செயல்பாடுகளினால் பள்ளி விழாக்களில் நாட்டுத் தலைவர்கள் அவர்களது தியாகங்களை எடுத்தியம்புகின்றனர். மேலும் வாராவாரம் குழு பாடல், நாடகங்கள், நடனம், பூக்களின் அலங்காரம், அறிவிப்பு பலகை ஒப்பனை போட்டி, வினாடி வினா ,மாறுவேடப்போட்டி ,சுவரொட்டிகள் தயாரித்தல், கதை கூறும் போட்டி, பேச்சுப்போட்டி ,எழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி ,கவிதை போட்டி ,பொன்மொழிகள் ,பாட்டுக்குப்பாட்டு காகித வேலைப்பாடு, படம் வரைதல், கோலப்போட்டி ஆகியவற்றால் திறமையை வெளிக் கொணர்ந்து ஆளுமைப் பண்பை பெற்றுத் திகழ்கின்றனர்.

முடிவுரை:-எதிர்காலத்தில் மாணவர்களை பண்புள்ள வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுள்ள பட்டதாரிகளாக உருவாக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம். இலட்சிய பாதை தொடரும் ...


                             இங்ஙனம்                        திருமதி. புஷ்பா,

பட்டதாரி ஆசிரியை ,

ஆங்கிலம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

பெட்டட்டி, 

குன்னூர், 

நீலகிரி.

நாள் :18.09.2014

Comments

Popular posts from this blog

My Identity as a Writing Teacher

Exploratory Action Research 2023