Say no to drinks


Say No to Drinks


மதுக்கடையை மாற்றிய பெட்டட்டி மாணவர்கள்

Say No to drinks

முன்னுரை :

          மாணவர்கள் சிறந்த மந்திரவாதிகள். மனது வைத்தால் எதனையும் மாற்றக்கூடிய மகாசக்திகள். ஊ. ஒ. ந. நி. பள்ளி, பெட்டட்டியில் மதுவினால் ஏற்பட்ட இன்னல்கள் ஏராளம். இப்பள்ளியின் மைதானத்தையொட்டி செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையால் விளையாட்டு மைதானம் பார்(BAR) ஆக மாறியிருந்தது.  5 மாணவர்கள் கொண்ட குழுவினால் பள்ளிக்கு அருகில் இருந்த மதுக்கடையை சற்று தொலைவிலும் அதன் பின் இப்பகுதியை விட்டுத் தூக்கிய வெற்றிக் கதையை இக்கட்டுரையின்கண் காண்போம்.


மதுக்கடையை அகற்றுவதன் நோக்கம்:

*குடிகார பெற்றோர்களை நல்வழிப்படுத்தி இளைய தலைமுறையினரை நெறிப்படுத்துதல் 

*மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் உழைத்துப் பெற்றதை மதுவுக்காக செலவழித்து விட்டு குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்ய இயலாத பெற்றோர்

 *மதுவாடை வீச பள்ளிக்கு வரும் பெற்றோரால் மனம் நொந்து போகும் மாணவர்கள்

  *மது போதையால் தாயிடம் மணிக்கணக்கில் போராடுவதால் செய்வதறியாது திகைக்கும் குழந்தைகள்

 *மதுவால் ஏற்படும் சச்சரவுகளால் பெற்றோரை அடிக்கடி பிரிந்து, பள்ளிக்கு வர வழியின்றி மன்றாடும் மழலைகள்

 *பெற்றோர் செய்வது தவறென்று அறியாமல் தவறான பாதையில் தள்ளாடும் தளிர்கள்

பெட்டட்டிப் பள்ளியில் மதுவின் தாக்கம்:

 *பள்ளிக்கு தடுமாறிய படி வருகிறார் தந்தை! வகுப்பறைக்குள் புகுந்தவர், 8வது படிக்கும் தனது மகளை இழுத்துப் போட்டு அடிக்கிறார். போதையில் அங்கேயே சரிகிறார்!

 *3வது படிக்கும் குழந்தை ஒருநாள் வகுப்பறைக்கு வரும் போதே தடுமாறியபடி வருகிறான். சிறிது நேரத்தில் வகுப்பிலேயே மயங்கி சரிகிறான். பதறிப் போய் பார்த்தேன்.அவனிடம் மதுவின் நெடி!

 *3 மற்றும் 5வது படிக்கும் குழந்தைகளின் பெற்றோர். இருவருமே குடிநோயாளிகள். தினமும் வீட்டில் சண்டை. ஒரு நாள் தந்தை தீக்குளித்து விட்டார்!

 *4 மற்றும் 5வது படிக்கும் சகோதரர்கள். குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார் தந்தை!

*8ஆம் வகுப்பு மாணவன் குடிநீர் பாட்டிலில் 4-5 சொட்டு மதுவைக் கலந்து, மோப்பம் பிடித்து உறிஞ்சுகிறான்!

மாற்றத்தை விரும்பியவர்கள்:

 மேதையை பேதையாக்கும் போதைக்குப் போர்தொடுக்க தலைமையாசிரியர் திரு. மனோகரன் தலைமையில், சிவரஞ்சினி,  ஜனனி, இலக்கியா,  சூர்யா, ரம்யா மற்றும் வழிகாட்டி ஆசிரியரான திருமதி. த.புஷ்பாவும் புறப்பட்டோம்.

  23.08.2001 ல் அரசுப்பள்ளி ஆசிரியராக பணியேற்ற நான், 10.6.2010 முதல் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். படிக்கும் குழந்தைகளின் மனவோட்டம் தெரியாமல் படிப்பைத் திணிப்பது வேதனையாக இருந்ததுஆகவே  23.9.2011 ல், 1-5 வகுப்பு மாணவர்களிடம் தகவல் திரட்டினோம்.

24.9.2011ல் 6-8 வகுப்பு மாணவர்களிடம் தகவல் திரட்டினோம்.

மாணவர்களிடம் திரட்டிய தகவல்களின் தொகுப்பு:

*பள்ளியில் பயிலும் மாணவர்கள்: 100

 *மொத்தக் குடும்பங்கள்:  69

  *மொத்தக் குடும்ப உறுப்பினர்கள்308

  *போதைப் பொருள் பயன்படுத்துவோர்:  78

  *பயன்படுத்தாதக் குடும்பங்கள்: 18

*புகைப்பிடித்தல்-47%, 

மது-72%, 

 மற்ற போதைப் பொருட்கள்-46%

இதில்  7 பெண்கள் மது அருந்துவது அதிர்ச்சி அளித்தது!

விழிப்புணர்வுப் பேரணி :

25.9.2011 அன்று மதுவினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி *மதுவை மற மனிதனாக மாறு* எனும் தலைப்பில் மாணவர் குடியிருப்புகளில் விழிப்புணர்வு பேரணி நடத்தி, துண்டு பிரசுரம் விநியோகித்தோம்.


 26.9.2011 அன்று அண்ணா நகர் மற்றும் அம்பேத்கார் நகரில் வசிக்கும் பெற்றோரிடமும் 

27.9.2011 அன்று பிற பகுதிகளிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடமும் தகவல் திரட்டினோம்.

 

பெற்றோர்களிடம் திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பு :

            *சந்தித்தப் பெற்றோர்கள்:  60

            *மதுவை மறக்க விருப்பம் தெரிவித்தோர்28

            *குடிக்காதப் பெற்றோர்8

            *24 பேர் மாற விருப்பமில்லை என்று கூறியது மனதிற்குச் சற்று   பாரமாக இருந்தது.

பெற்றோருக்கு அஞ்சல் வழியில் கடிதம்:

            28.9.2011 ல் மாணவர்கள், தம் பெற்றோர் மது அருந்துவதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்களது உள்ளுணர்வுகளையும் கடிதத்தில் எழுதி அத்துடன் பள்ளியில் நடைபெறும் மதுவை மறந்து மனிதனாக வாழ நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அவர்தம் கையெழுத்தில் அஞ்சலில் அழைப்பு விடுத்தனர்.  அன்று என்னிடமும் குழந்தைகளிடமும் ஒருவித அச்சம் தோன்றியது! இருப்பினும் நல்ல எதிர்காலத்தை எண்ணி சுதாரித்துக் கொண்டோம்.

      அக்கடிதத்தைக் கண்ட பெற்றோர் சிலர் குழந்தைகளை வதைத்தனர். அடுத்த நாள் சிலர் அக்கடிதத்தை  கசக்கி சுருட்டிக் காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது என்மீது வீசினர்! தகாத வார்த்தைகளால் தாக்கவும் செய்தனர்.  தலைமையாசிரியரின் அரவணைப்பினால் பொறுமையாக இருந்தோம்.

விழிப்புணர்வு முகாம் :

          01.10.2011ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுவிலிருந்து மாற விரும்புவோருக்கான விழிப்புணர்வு முகாம் நத்தினோம். இது தொடர்பான மாணவர்களின் கவிதை, பாடல், பேச்சு மற்றும் நாடகம் இடம்பெற்றன. மாணவர்களின் இயல்பான நாடகம் பலரது மனதை உருக்கியது. பெரும்பாலான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆல்ஹாலிக் அனானமஸ் குழுவினர் கடந்து வந்த பாதையின் கொடூரத்தைப் பற்றி கலந்துரையாடினர்.

மாற்றம் என்பது சாத்தியமே:

                  01.10.2011 அன்றே 8 பெற்றோர்கள் தலைமுறையினரின் நலனுக்காக ஆல்கஹாலிக் அனானமஸ் குழுவுடன் இணைந்து தங்களை மாற்றிக் கொள்ள உறுதி மொழி எடுத்தனர்! பள்ளியின் நலனுக்காக மதுவிற்கு ஆகும் செலவினை சேகரிக்க  ”து உண்டியலையும்” தந்து இனி மது அருந்த மாட்டோம் என்று மழலைகளின் மீது சத்தியம் செய்தனர்.

        இச்செய்தி பத்திரிக்கைகளில் பகிரப்பட்டு, காந்தி பிறந்த மண்ணில் தேசிய அளவில் சிறந்த 100 செயல் திட்டங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு  I CAN விருது  2014ல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  மட்டற்ற மகிழ்ச்சியில் பெற்றோர்கள் மாணவர்களுடன் இணைந்து, மாண்புமிகு முதலமைச்சருக்கு, ”அருகாமையில் இருந்த மதுக்கடையை அகற்றக்கோரி” கையெழுத்துப் போராட்டம் நடத்தினர்.

     மேலும் பெற்றோர் சாலை மறியல், மாவட்ட ஆட்சியருக்கு மனு எனத் தொடர் போரட்டங்களினால் மதுக்கடையை இப்பகுதியிலிருந்து துரத்தினர்!


     ”தி இந்து” பத்திரிகையும் எங்களுக்கு கைகோர்த்து. ”மெல்லத்தமிழன் இனி” என்னும் புத்தத்தில்,  T. L. சஞ்சீவிக்குமார் எங்கள் பள்ளியில் மாணவர்களால் ஏற்பட்ட மாற்றத்தை வெளியிட்டிருந்தார்.


     நாக்கு பெட்டா தொலைக்காட்சியும் எங்களை கௌரவித்துப் பேட்டியைப் பதிவு செய்தது.

Nakkubetta TV _I can award program

முடிவுரை:


       பெரியவர்களாகிய நம்மை விட பெரும் மாற்றங்களை லரச் செய்யும் வல்லமையைப் பெற்றவர்கள் குழந்தைகள்!  தற்போது மது அருந்தியவர்கள் பள்ளியின் நுழைவாயில் வரவே தயங்குகின்றனர்!  மதுவின் வாசம் வீசாத பள்ளியாக சாதித்துக் காட்டியுள்ளார்கள் பெட்டட்டிப் பள்ளி மாணவர்கள். மதிப்பெண்ணையும் வீட்டுப் பாடத்தையும் தாண்டி மாணவர்களை யோசிப்போம்; மகத்தான வெற்றிகளைப் பெறுவோம்!

                       dpushpa761@gmail.com


                                  

Comments

  1. Superb mam. Congrats mam. May God be with you in all your endeavours.

    ReplyDelete
  2. உங்களைப் போன்ற களப்பணி ஆசிரியர்களால் மது வில்லா புதியதோர் உலகம் உருவாகும் ..வாழ்த்துகள் ...

    ReplyDelete
  3. My humble request is pls write up this in English and post it.. .Other our state people also know about your initiative. ..

    ReplyDelete
  4. Fabulous work. Best wishes teacher.

    ReplyDelete
  5. 👌👌rocking. Great. Hearty wishes. Go on. Achieve more mam.

    ReplyDelete
  6. Say no to drinks this creation really will help to the students
    I appreciate your efforts. Really you are a great teacher.
    I wish you to continue your social welfare work 🙏🙏🙏👏👏

    ReplyDelete
  7. Heartfelt appreciation for your noble work. Surely It would not have been an easy process for you. There woild have been untold pressure from many sources. Still you have achieved something really great for your students and their families.
    Hatsoff for your courage. Hope this inspires more people to do this noble service to society.

    ReplyDelete
  8. அருமை! தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Identity as a Writing Teacher

Exploratory Action Research 2023