First Woman Teacher -Savithri bai Phule

           

Savithri bai Phule -Life history

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் 
சாவித்ரி பாய் புலே 
     *1800 களில் பெண் கல்வி கற்றால் கணவர் உண்ணும் உணவு புழுவாக மாறிவிடும் என்ற மூடநம்பிக்கைகள்  அப்பிக் கிடந்த காலத்தில் பெண் உரிமைக்காக போராடியவர். 
       *சமூகத்த்தில் தாழ்த்தப் பட்டவர்களிலும் தாழ்த்த பட்டவர்களாக பெண்கள் கருதப் பட்ட காலத்தில் தடைகளை உடைத்து பெண்களுக்கு கல்வி புகட்டியவர். 
     *கல்வி என்ற வலிமை வாய்ந்த ஆயுதம் மூலமே மாற்றங்களை  கொண்டுவரமுடியும் என்று வாழ்வே சேவையாகி போனவர். 
       * கணவரின் வழிகாட்டுதலுடன் திருமணத்திற்கு பின் அடிப்படை கல்வி முதல் முறையான ஆசிரியர் பயிற்சி வரை கற்று  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் படிப்புடன் தொழிற்பயிற்சி வழங்கியவர். 
     *கல்வியை சமத்துவ கருவியாக்க உயர் தட்டு மக்கள் வீசி எறிந்த மனித மலத்தையும் மலர்களாக நினைத்து சவால்களை சந்தித்த சரித்திர பெண். 
       *1848 ல் 9 பெண்களுடன் தொடங்கி 1854ல் 200 ஆக உயர்த்தியதோடு 417 பெண்களை அடுத்த தலைமுறை ஆசிரியராக்கிய சாதனை ஆசிரியர்.


இந்தியாவின் முதல் பிரதமர், முதல் ஜனாதிபதி, முதல் பெண் மருத்துவர்,விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி இதற்கு எல்லாம் விடையைச் சொல்லி விடுவோம். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்? என்றால் நம்மில் பலருக்கு தெரியாது. ஏனெனில் இந்த கேள்வியே புதிது.ஆம் வாழ்வே சேவையாகி போன சாவித்திரி பாய் புலே தான்  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.

பெண் கல்வி ,பெண் விடுதலை இவை இன்றைய கோஷங்களா ஏன் இன்றைய தேவைகள் தானே  என்று இன்று நாம் கேட்க அடித்தளம் இட்டவர்.

1800-களில் பெண் கல்வி கற்றால் கணவர் உண்ணும் உணவு புழுவாக மாறிவிடும் என்ற மூடநம்பிக்கைகள் அப்பிக் கிடந்த காலத்தில் பெண் உரிமைக்காக போராடியவர்.

1947 வரை சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களாக பெண்கள் கருதப்பட்ட காலத்தில் தடைகளை உடைத்து மடைகளைத் திறந்தார். ஆதிக்க சக்தி வர்ண முறையை எதிர்த்தார்.

கல்வி என்ற வலிமை வாய்ந்த ஆயுதம் மூலமே மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று பெண் கல்விக்காகவும் பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார்


கல்வி கற்றுக் கொள் போ
 சுயசார்பு உள்ளவராக சுறுசுறுப்பானவர் ஆக இரு
 வேலை செய் 
அறிவையும் செல்வத்தையும் திரட்டு அறிவில்லாத இருந்தால் 
இழந்து நிற்போம் அனைத்தையும் அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம் சும்மா இராதே
 போய் இனியேனும் கல்வியை பெறு ஒடுக்கப்பட்டவர் மற்றும் கைவிடப்பட்டோர் அனைவரது துன்பங்களையும் போக்கு
 படிக்க உனக்கு வாய்த்துள்ளது 
ஒரு பொன்னான நேரம் 
எனவே படி 
தகர்த்தெறி சாதிய சங்கிலிகளை வீசி ஏறி பார்ப்பனிய வேதங்களை என்றார்.

சிறு சிறு விஷயத்திற்கு எல்லாம் துவண்டு போகும் நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சாதனைப்பெண் இந்தியாவின் இரும்புப் பெண் சாவித்திரி பாய் புலே.

சாவித்திரி பாய் புலே 1831 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேக்கு அருகில் சதாரா மாவட்டத்தில் நைகோன் என்னும் கிராமத்தில் வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை கண்டோன்ஜி  நிவேஷ் பட்டேல் ஒரு கிராமத் தலைவர். தாய் லட்சுமி பாய். அக்காலத்தில் பெண் கல்வி மறுக்கப்பட்டதால் பள்ளிக்கூடம் செல்லவில்லை.

1840 இல் அக்கால முறைப்படி தனது 9 வயதில் 13 வயதான ஜோதிராவ் புலே யுடன் குழந்தை திருமணம் நடந்தது. முற்போக்காளரான, சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலே தனது துணைவியார் படிப்பறிவு இல்லாமல் இருப்பதை விரும்பவில்லை. வீட்டிலேயே நான்கு ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் அடிப்படைக் கல்வியை புகட்டினார். நண்பர் உதவியுடனும் கற்பித்தார். பின்னர் ஆறு மாதம் மைக்கேல்துரை என்பாரது துணைவியார் வெள்ளையருக்காக நடத்திய புனே ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முறையாக பயிற்றுவித்தார். 

1846 இல் இருவரும் இணைந்து பள்ளியை தொடங்கினர். மேல்தட்டு மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  கல்வி புகட்டுவதை விரும்பாமல் எதிர்த்தனர். பள்ளி மூடப்பட்டது.

1848 இல் புனேவில் பீடேவாடு என்ற இடத்தில் நாராயண் பேத் என்னும் பள்ளியை 9 குழந்தைகளுடன் திறந்தார்கள் .ஆம்! இதுதான் இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி. உயர் குல மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கற்பிக்க முன்வராததால் அப்பள்ளியின் ஆசிரியராக சாவித்திரிபாய் புலே பொறுப்பேற்றார். அன்று தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனார்.

1800களில் இந்தியாவில் கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. 4 வேதங்களை படிப்பதே கல்வி .அதுவும் அனைத்து சமூகத்தினருக்கும் இல்லை. பிராமணர்களைத் தவிர யாருக்கும் கல்வி கிடையாது .பிராமணப் பெண்களுக்கும் கூட கல்வி மறுக்கப்பட்டது.

1813 இல் பிரிட்டிஷார் கல்வி தொடங்கினர். 1822 கணக்கெடுப்பின்படி 1%  குறைவாகவே பெண்கள் படித்தனர்.

1849 இல் உஸ்மான் சேக்வாடாவில் தொடங்கிய பள்ளியில் முதியோர் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சாதியினரும் சேர்த்து 150 பெண்களும் ஆண்களும் படித்தனர். அவர்களுக்கு படிப்புடன் தொழிற்பயிற்சி மையத்தில் பயிற்சியும் வழங்கப்பட்டது.

பிராமணியம் வகுத்துள்ள மனு தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக இவர்கள் மீது கற்கள் ,மாட்டுச்சாணம் வீசப்பட்டது. பெண்ணை வெளியே அழைத்து வந்ததற்காக மகாத்மா ஜோதிராவ் புலே தாக்கப்பட்டார்.

1849 இல் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .ஒரு பெண் கற்பித்து இந்த சமூகம் அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகம் வளர வேண்டுமா என சாவித்திரிபாய் தாக்கப்பட்டார். இப்பெண் நம் மதத்திற்கே அவமானம் சேர்ப்பார் என்று ஏசப்பட்டார்.

இளம் தம்பதியினருக்கு எல்லா தரப்பிலும் எதிர்ப்பு ஒவ்வொரு நாளும் மோசமான சங்கடங்கள் ,கற்கள் ,ஆடு மாடுகளின் கழிவு ,மனித மலம் தக்காளி, முட்டை என மேல்தட்டு மக்கள் அவர் பள்ளிக்குச் செல்லும் போது வீசி எறிந்தனர்.

இந்நிலையில் ஒரு முறை மனித மலத்தின் துர்நாற்றத்தால் பள்ளியில் மாணவர்கள் பாடம் கற்க சிரமப் படுகிறார்கள் என்று தன் கணவருக்கு கடிதம் எழுதினார். அதற்கு கணவர் காலையில் செல்லும் போது உடுத்திய சேலையை பள்ளிக்குச் சென்றதும் மாற்றிக்கொள். மாலையில் வரும் போது மீண்டும் அந்த அழுக்கு சேலையை அணிந்து கொள். ஏனெனில் நம் இருவரால் மட்டும் சமுதாயத்தை மாற்ற முடியாது. கல்வி மூலம் தான் சமுதாயத்தில் மாற்றத்தை காண முடியும் என்று பதில் கடிதம் அனுப்புகிறார். ஆம்! கல்வியை சமத்துவ கருவி ஆக்கினர்.

அற்புதமே பெண்ணான இவர் கல்வி என்னும் புனிதத்தை வழங்கும் எனக்கு இவை மலர்கள் ஆகவே தோன்றுகின்றன எனக் கூறி இரண்டு சேலைகளுடன் தொடர் சேவை ஆற்றினார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்களுக்காக இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பாத்திமா ஷேக் உடன் இணைந்து கல்வி புகட்டினார். 1863 இல் தனி நூலகம் அமைத்தார் .இரட்டை குவளை முறை இருந்த காலகட்டத்தில் தங்கள் வீட்டிலேயே கிணறு வெட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு குடிநீர் எடுத்துக்கொள்ள வழி செய்தனர். எதிர்ப்புகள் வந்த போதும் மனம் தளராமல் தனது சேவையைத் தொடர்ந்தார்.

1852 இல் மஹிளா சேவா மண்டல் தொடங்கி தீண்டாமை ,குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். நவீன பெண்ணியத்தின் முன்னோடியாக பெண்களுக்கு மனித உரிமை பற்றி விழிப்புணர்வு வழங்கினார்.

1800-களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பார்கள். பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டை அடிக்கும் பழக்கம் இருந்தது .1860 இல் நாவிதர்களுடன் பேசி மகிளா சேவா மண்டலுடன் இணைந்து மொட்டையடிக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடினார்.

புரோகிதர் இல்லாத திருமணத்தை வலியுறுத்தி திருமணத்தை நடத்தியும் காட்டினார் .திருமணங்களின் போது பெண்களை படிக்க வைப்போம் என மாப்பிள்ளைகளை மணமேடையில் உறுதிமொழி எடுக்க வைத்தார்.

கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று .சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் வாழ்வாதாரத்துக்காக பாலியல் சுரண்டலுக்கு ஆளானார்கள். சில பெண்கள் கருவுற்று வெளியில் தெரிய வந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வது அதிகமாக இருந்தது. விதவைப் பெண்களுக்காகவும் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் சிசுக்கொலை தடுப்பு இல்லம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவ்வாறே பிராமணப் பெண்ணான ஒருவரை தற்கொலையில் இருந்து மீட்டு அவருடைய குழந்தை யஸ்வந்தை தத்தெடுத்தார்.

எழுதப் படிக்க கற்றுக் கொடுப்பது அல்ல கல்வி. மனதின் மற்றும் சிந்தனையின் வளர்ச்சி தான் கல்வி என்றார். இடைநிற்றலை தடுக்க கல்வி உதவித்தொகை ,மதிய உணவு, பெற்றோருடன் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் என தொடர்ந்து வழிகாட்டினார்.

 கல்வி வயது பேதமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் வேலைக்கு செல்பவர்களுக்காக 1855இல் இரவு பள்ளியைத் தொடங்கினார்.

கல்வி சரி, தவறு என ஆராயும் திறனை  வளர்ப்பதாகவும் தானே மெய் ,பொய் என்பதனை உணர வைப்பதாகவும் இருக்க வேண்டுமென்று புதிய பாடத்திட்டத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு பரிந்துரைத்தார்.

கல்விதான் விடுதலை படித்து பட்டம் பெறுவதோடு நில்லாமல் வாழ்க்கையின் அநீதிகளுக்கு எதிராக போராடு
 கல்வி பெறு புத்தகத்தை கையில் எடு 
அறிவு சேரும்போது ஞானம் வளரும் போது அனைத்தும் மாறிவிடும் வாசிப்பே விடுதலை என்றார்.

சாவித்திரிபாய் கல்வியாளர் மட்டுமல்ல, சிறந்த கவிஞரும் கூட. இயற்கை, சமூகம்,வரலாறு, கல்வி, பெண்ணுரிமை, தீண்டாமை ஆகிய தலைப்புகளில் கவிதைகளை எழுதியுள்ளார். அவருடைய 267 பெண்ணிய கவிதைகளை 1934இல் அவருடைய மாணவி தொகுத்து காவிய மலர்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

1848 இல் 9 பெண்களுடன் தொடங்கிய பள்ளியில் 1854 இல் 200 பெண்கள் படித்தனர் .நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்றால் உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களில் எத்தனை பேர் மருத்துவர், பொறியாளர் ,ஐ.ஏ.எஸ் ஆனார்கள் என்பதல்ல வெற்றி .எத்தனைபேர் உங்களைப் பார்த்து ஆசிரியர் பணி செய்ய முடிவு செய்தார்கள் என்பதே வெற்றி. 417 பெண்களை அடுத்த தலைமுறை ஆசிரியராக்கிய மிகப் பெரிய சாதனையாளர் சாவித்திரிபாய் புலே.

1870இல் கடும் பஞ்சத்தால் ஏராளமான குழந்தைகள் அனாதைகள் ஆயினர். அவர்களுக்காக 52 உறைவிடப் பள்ளிகளைத் மிகப்பெரிய சமூகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தொடங்கினர். கடைசியாக தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில் பஞ்சத்தினால் மக்கள் எப்படி தனது சிறுநீரை தானே குடிக்கும் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று விவரிக்கிறார். மேலும் காலம் எவ்வளவு பெரிய இடரை ஏற்படுத்தினாலும் நமது செயல்பாடுகள் தடைபடக் கூடாது என்றும் எழுதியுள்ளார். அவ்வாண்டில் ஜோதிபாய் பூலே மறைந்தார். கட்டுப்பாடுகளை மீறி தன் கணவனின் உடலுக்கு தானே தீ மூட்டினார்.

1873 இல் சத்திய சோதக் சமாஜ் -ல்- மகளிர் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். 1876 இல் பிளேக் நோய் உச்சத்தில் இருந்ததால் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாக உணவு வழங்கினார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் பிரிட்டிஷ் அரசு சிகிச்சை அளிக்க மறுத்தது. பஞ்ச நிவாரண பணிக்கு பிரிட்டிஷ் அரசை நிர்பந்தித்து வெற்றியும் கண்டார்.

மருத்துவம் படித்து தென்ஆப்பிரிக்க இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்த வளர்ப்பு மகன் யஸ்வந்த் உதவியால் ஹடாஸ்பூரில்  ஊருக்கு வெளியே தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

66 வயதில் 10 வயது பாண்டுரங் பாபாஜியை தூக்கிக் கொண்டு வரும் பொழுது தொற்றுநோய் ஏற்பட்டு 10 .3 .1897 இல் மரணமடைந்தார் .

1852 இல் பிரிட்டிஷ் அரசு இவருக்கு சிறந்த ஆசிரியர் அங்கீகாரம் வழங்கியது.

 1853 இல் மகாராஷ்டிரா அரசு சிறந்த ஆசிரியராக இவரை கௌரவித்தது.

 1998இல் மத்திய அரசு அவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது.

 மராட்டிய அரசு அவருடைய பிறந்த நாளான ஜனவரி 3ஆம் தினத்தை பெண்கள் தினமாக கொண்டாடி வருகிறது.
2015இல் புனே பல்கலைக்கழகம் சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்பட்டது.

சமூக விடுதலையை பற்றி நினைத்துகூட பார்க்க முடியாத காலகட்டத்தில் பெண் கல்வி ,விதவை மறுமணம் ,புரோகிதர் இல்லாத திருமணம் ,தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை என தன் மொத்த வாழ்நாளையும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி இந்த சமூகத்திற்கு ஆகவே செலவிட்ட இவர்தான் சிறந்த ஆசிரியர். உண்மையான இரும்புப் பெண். பழைய மத சங்கிலிகளை உடைத்த மனிதநேய பாதைக்கு வித்திட்ட பெண்சிங்கம்.

பூக்கள் அல்ல பெண்கள். புயல் களாகவும் இருப்பார்கள் என்று புரட்சி செய்து காட்டிய பெண். தனக்கென வாழ்வது சாதாரண வாழ்க்கை. பிறர் க்கென வாழ்வதே சரித்திர வாழ்க்கை என்பதை உணர்த்தியவர்.

உன்னில் நம்பிக்கைக் கொள் 
விழித்திரு, உழைத்திரு
கல்வி இல்லையேல் எதுவும் இல்லை
 ஞானம் இல்லையேல் மிருகங்களை மிச்சமாகும் அறிவினைத் திரட்டி க் கொள்
ஒடுக்கப்பட்டவர் துன்பம் நீக்கு 
ஆழ் மணல் தங்கத்துகள்  போல்தான் கற்றலும் கற்றுக்கொள் 
அறிவின் ஆதி வரை சிந்தித்திரு 
சாதி என்னும் சங்கிலியை அறுத்து எறி 
ஆதிக்கம் என்னும் சொல்லை தூர வீசு 
என சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட சாவித்திரிபாய் பூலேயின் சாதனைகள் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும். பெண்களாகிய நாம் ஒவ்வொருவரும் சாவித்திரிபாய் புலே வுக்கு கடன் பட்டிருக்கிறோம்.  சிறந்த ஆசிரியராக,சீர்திருத்தவாதியாக, மருத்துவராக, கவிஞராக செயல்பட்ட அவர் வழி நடப்போம். இதுவும் கடந்து போகும். சாவித்திரிபாய் புலே பஞ்சம், பிளேக் என வந்தபோதும் துவளாமல் தொடர்ந்து கல்விப் பணியாற்றினார். ஆசிரியர்களாகிய நாங்களும் கொரொனா காலத்தில் மாணவர் சேர்க்கை, அரசின் நலத் திட்டங்களை கொண்டு சேர்த்தல், இணைய வழியில் பாடங்களை நடத்துதல், மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்தல் என வழிகாட்டி வருகிறோம்.

Heartfelt thanks to:-
Thavathiru Santhalinga Adigalar Arts And Science Tamil College, Perur, Coimbatore.
 for giving me the wonderful opportunity to share few words about Savithri Bhai Phule.

Receiving book from Varunani, the Fastest reader of CELT batch 2  from Tamilnadu @RIESI,  Bengaluru.





Comments

  1. Pushpa mam you are prodigious always... Happy for this blog about savitri ma...

    ReplyDelete
  2. Education is the most powerful weapon which you can use to change this world.
    மங்கையராக பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும். அன்பு சகோதரியே,அம்மா சாவித்திரிபாய் புலேயின் சரித்திரத்தை உம் வரிகளில் காணும் போது மீண்டும் ஒரு சாதனை ஆசிரியரை நான் காண்கிறேன். வாழ்த்துக்கள் வளர்க சகோதரியே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Identity as a Writing Teacher

Exploratory Action Research 2023